காக்கும் உறவுகள் 2017”-குழு சார்பாக மறைந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய மாவட்ட எஸ்பி - நிதி திரட்டிய காவலர்களுக்கு பாராட்டு
காக்கும் உறவுகள் 2017”-குழு சார்பாக மறைந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய மாவட்ட எஸ்பி நிதி திரட்டிய காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.;
அரியலூர், செப்.27- அரியலூர் மாவட்டத்தில், மறைந்த காவலர் சதீஷ் குடும்பத்துக்கு, “காக்கும் உறவுகள் 2017” குழு சார்பாக ரூ.20 லட்சத்து 50 ஆயிரத்து 700 தொகையை, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த சதீஷ் , கடந்த ஆகஸ்ட் மாதம் எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு மனைவி, 1மகள், 1 மகன் மற்றும் பெற்றோர்கள் உள்ளனர். இதையடுத்து சதீஷ் அவர்களின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், சதீஷ் உடன் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்த காவலர்கள், "காக்கும் உறவுகள்-2017" என்ற வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைந்து 38 மாவட்டங்களில் இருந்து 6904 பேர் பங்களிப்பு செய்து ரூ 20லட்சத்து 50ஆயிரம் நிதி திரட்டினார்கள். ரூ19 லட்சம் சதீஷ் குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால தேவைக்காக தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு, பணம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மறைந்த காவலரின் குடும்பத்தினருக்கு, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் ரூ 1 லட்சத்து 50 ஆயிரத்து 700 பணம் ரொக்கமாகவும் மற்றும் 19 லட்சத்திற்கான தபால் நிலைய சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கப்பட்டது.இப்பணத்தை குழந்தைகளின் எதிர்கால தேவைக்கு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும், காவல்துறை மற்றும் அரசின் சார்பாக கிடைக்கப்பெற வேண்டிய நல உதவிகள் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , சதீஷ் அவர்களின் குடும்பத்தினரிடம் கூறினார்கள். மேலும் மறைந்த காவலரின் குடும்பத்தினருக்கு உதவும் நோக்கில் நிதி திரட்டிய காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றும் 2017 பேட்ச் காவலர்கள் கலந்து கொண்டனர்.