பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை:
பர்னஸ் ஆயில் வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு மெய்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
பர்னஸ் ஆயில் வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு மெய்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி மணல் தெருவைச் சேர்ந்த பெர்னி கொரைரா மகன் இக்னேஷியஸ் ப்ரேசர் கொரைரா (42) என்பவரிடம், திருநெல்வேலி கீழமகாராஜ நகரைச் சேர்ந்த தங்கராஜன் மகன் சலோமின் அற்புதராஜ் (எ) சாலமோன் அற்புதராஜ் (33) என்பவர் அறிமுகமாகி தான் அரசு ஒப்பந்ததாரராக வேலை பார்ப்பதாகவும், பர்னஸ் ஆயிலின் விற்பனை நல்ல ஏற்றத்தில் உள்ளதால், பர்னஸ் ஆயிலை வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி இக்னேஷியஸ் பிரேசர் கொரைரா மொத்தம் ரூ.24,05,000 பணத்தை ரொக்க பணம் மற்றும் வங்கிக் கணக்கு மூலம் சலோமின் அற்புதராஜ் (எ) சாலமோன் அற்புதராஜுக்கு கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட சாலமின் அற்புதராஜ் (எ) சாலமோன் அற்புதராஜ் பர்னஸ் ஆயிலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக இக்னேஷியஸ் ப்ரேசர் கொரைரா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு - I போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி சாலமின் அற்புதராஜ் (எ) சாலமோன் அற்புதராஜை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் - IVல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குபேரசுந்தர், குற்றவாளியான சாலமின் அற்புதராஜ் (எ) சாலமோன் அற்புதராஜுக்கு 3 ஆண்டு மெய்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த மாவட்ட குற்றப்பிரிவு I காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் வைரமணி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.