ஜெயங்கொண்டம் கிளை சிறைக்கு மதில் சுவர் கட்ட ரூபாய் 48 லட்சம் ஒதுக்கீடு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சமூக ஆர்வலர்கள்.
ஜெயங்கொண்டம் கிளை சிறைச்சாலைக்கு மதில் சுவர் கட்ட ரூபாய் 48 லட்சம் நிதி ஒதுக்கிய தமிழக முதலமைச்சருக்கு பகுதி மக்கள் சார்பாக சிறைச்சாலை அலுவல் சாரா பார்வையாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.;
அரியலூர், அக்.9- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிளை சிறைச்சாலையில் மதில் சுவர் சேதமடைந்து கடந்த கடந்த மாதம் பெய்த மழை காரணமாகவும், ஏற்கனவே சிதலமடைந்த நிலையில் இருந்த மதிலசுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் ஜெயங்கொண்டம் கிளை சிறை பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கிளைசிறைச்சாலையில் இருந்த சிறைக் கைதிகள் அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் ஜெயங்கொண்டம் கிளை சிறைச்சாலை செயல்படாமல் இருந்து வந்தது. மதில் சுவர் சிதலம் அடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்த போது சென்ற ஆண்டு ஜெயங்கொண்டதிற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து புதிய மதில் சுவர் கட்ட சிறைச்சாலை அலுவல் சாரா பார்வையாளர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை மனு அளித்திருந்தார். அதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்டு தற்பொழுது ரூபாய் 48 லட்சத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு சிறைச்சாலை அலுவல் சாரா பார்வையாளர் ஆர். கே. செல்வமணி தமிழக முதலமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் ஜெயங்கொண்டம் பகுதி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார். மேலும் சிறைச்சாலை மதில் சுவர் கட்டும் பணியினை விரைவில் தொடங்கி ஜெயங்கொண்டம் சிறைச்சாலையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறைச்சாலை அலுவல் சாரா பார்வையாளர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்துள்ளார்.