கோவை: கொலை வழக்கு - 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
மாட்டிறைச்சி வாங்கி பணம் தராததைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு – இரட்டை கொலை வழக்கில் 10 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்கு பின் தீர்ப்பு.;
கோவையில் மாட்டிறைச்சி வாங்கி பணம் தராததை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், கடை உரிமையாளர் உட்பட 2 பேரை குத்திக் கொன்ற வழக்கில், 5 பேருக்கு கோவை ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2015-ஆம் ஆண்டு என்.எச். சாலை அருகே மாட்டிறைச்சி கடை நடத்தி வந்த மொய்தீன் பாஷாவுடன், சாதிக் அலி எனும் நபர் பணம் தராமல் இறைச்சி எடுத்துச் சென்றதை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இடையார் வீதி சந்திப்பில் நடந்த மோதலில், சாதிக் அலி மற்றும் அவரது கூட்டத்தினர் மொய்தீன் பாஷா, அபி முகமத் ஆகியோரை கத்தியால் தாக்கி கொலை செய்தனர். இந்த வழக்கில் சாதிக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகீர் உசேன், அசாருதீன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ₹4,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.