11 மாவட்டங்களில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளை திறப்பு

போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கல்லூரி மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதி வழங்கினார்.;

Update: 2025-05-26 15:05 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தத்தில் இருபாலருக்கான புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் – மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கல்லூரி மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதி வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக்காட்சி மூலம் பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் உள்பட 11 மாவட்டங்களில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளை இன்று (26.05.2025) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியினை கொளக்காநத்தம் மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், ஆலத்தூர் முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் ந.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரலை நிகழ்வை பார்த்து, வகுப்பறையில் குத்துவிளக்கேற்றி இனிப்புகளை வழங்கினர். பின்னர், இந்கிழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தமிழ்நாட்டில் கல்விக்கண் திறந்தவர் காமராசர் என்பதைப்போல, உயர் கல்விக்கண் திறந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அதிக கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உருவாக்கப்பட்டது. அவரின் வழியில் நல்லாட்சி நடத்திவரும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கல்வி ஒன்றே யாராலும் அழிக்க இயலாத சொத்து என்பதை உணர்ந்து நம் தமிழ்நாட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். தமிழ்நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில “புதுமைப்பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில “தமிழ்ப்புதல்வன்” திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகையாக வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைககள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகின்றது. இந்த ஆண்டு முதல் கல்லூரி பயிலும் மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் “தேர்வை வெல்வோம்” என்ற தொகுப்பு எனது சார்பில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் என 4 தொகுதிகளுக்கும் “தேர்வை வெல்வோம்” என்ற புத்தகத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் படித்தால் மட்டும் போதாது, படித்தவுடன் அவர்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் குன்னம் பகுதியில் கலைஞர் கணினி மையம் தொடங்கப்பட்டு, 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் டேலி (TALLY) பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இன்றையதினம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு 11 மாவட்டங்களில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்கி வைத்துள்ளார்கள். அதில் நமது மாவட்டத்தில் கொளக்காநத்தம் போன்ற பின்தங்கிய பகுதியில் இந்த அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டிருப்பதன் நோக்கம், கிராமப்புற ஏழை,எளிய மாணவ மாணவிகளுக்கும் உயர்கல்வி எளிதில் கிடைக்க வேண்டும் என்பதுதான். வணிகவியல், கணினி அறிவியல், உயிர்தொழில்நுட்பவியல், பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் உள்ளிட்ட 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில், 280 மாணவ மாணவிகள் பயிலும் வகையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிக்கான முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் என 6 பேராசிரியர்களும், 5 அலுவலகப் பணியாளர்களும் என 11 பணியிடங்கள் முதற்கட்டமாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இணையவழியாக இதுவரை 1820 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கொளக்காநத்தத்திற்கு புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை மக்களின் சார்பில், மாணவ மாணவிகளின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும், இந்தக் கல்லூரி அமைய பரிந்துரை செய்த மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், இந்தக்கல்லூரியை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்த முன்னாள் ஆலத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். கல்லூரியின் மேம்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதிஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நம் திராவிட மாடல் முதல்வர் அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களை மாணவ,மாணவிகள் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன். இவ்வாறு தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, கொளக்காநத்தம் மேல்நிலைப் பள்ளியில், தற்காலிகமாக கல்லூரிக்காக அமைக்கப்பட்டுள்ள வகுப்பறைகளையும், கல்லூரியில் சேருவதற்கு ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க மாணவ மாணவிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த உதவி மையத்தையும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில், கல்லூரிக் கல்வி இயக்குநர் பி.பொன்முத்துராமலிங்கம், கொளக்காநத்தம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.கண்ணதாசன், முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி முருகம்மாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி, அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News