17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: செல்போனில் படம் எடுத்து வைத்து மிரட்டி தொந்தரவு செய்த இளைஞர் கைது
போக்சோ;
தஞ்சாவூர், பூமால் ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன் (22), இவர் மளிகைக் கடை ஒன்றில் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், 17 வயது சிறுமியும், சத்தியசீலனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி, சத்தியசீலன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், சத்தியசீலன், சிறுமியுடன் ஒன்றாக இருந்ததை, செல்போனில் படம் எடுத்து வைத்துக்கொண்டு, சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். சத்தியசீலனின் மிரட்டல் தாங்க முடியாமல், சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இது குறித்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்தார். இதன்பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சத்தியசீலன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தது உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சத்தியசீலனை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.