கட்டிட தொழிலாளி கொலையில் 2 வாலிபர்கள் கைது
குமரி மாவட்டம் நெய்யூர் திங்கள் சந்தை பகுதியை சேர்ந்தவர் ஜூலியஸ் குமார் (வயது 40). கட்டிட தொழிலாளியான இவர் புதிய கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை செய்து வந்தார்.கடந்த சில வாரங்களாக நெல்லை அருகே உள்ள திடீயூரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் அவர் ஈடுபட்டு வந்தார்.இதற்காக சக தொழிலாளர்களுடன் கல்லூரி வளாகத்தில் இருந்த அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.நேற்று அதிகாலை சக தொழிலாளர்களில் சிலர் பார்த்தபோது அவர் கோடாரி மற்றும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், குடிபோதையில் சக தொழிலாளர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் ஜூலியஸ் குமாருடன் தங்கியிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் 2 தொழிலாளர்கள் அங்கு இல்லை. இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.இந்நிலையில், காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த குமரி மாவட்டம் சாமியார்மடத்தை சேர்ந்த சூர்யா(24) மற்றும் திங்கள்சந்தை பகுதி சானல்கரையை சேர்ந்த செல்வன் (33) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தீபாவளி அன்று இரவு தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்ததாகவும் அப்போது ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றியதில் ஜூலியஸ் குமாரை வெட்டிக்கொலை செய்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.