240 உர மூட்டைகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே உர மூட்டைகளுடன் லாரியை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்.
Update: 2024-03-19 17:43 GMT
தஞ்சாவூர் அருகே உரிய ஆவணமின்றி லாரியில் கொண்டு வரப்பட்ட 240 உர மூட்டைகளைத் தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை காலை பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் பறக்கும் படை அலுவலர் சி.அஜய்ராஜ் தலைமையில், காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை காலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது சேலத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ரூ. 6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்ததும், அதற்குரிய ஆவணங்கள் ஓட்டுநரிடம் இல்லாததும் தெரிய வந்தது. இதையடுத்து, உர மூட்டைகளுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களைக் காண்பித்து எடுத்துச் செல்லுமாறு லாரி ஓட்டுநரிடம் தேர்தல் பறக்கும் படையினர் அறிவுறுத்தினர். ரூ. 1.13 லட்சம் பறிமுதல்: இதேபோல, தஞ்சாவூர் அருகே திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நெடார் வெட்டாறு பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஏ. ராஜீவ்பாண்டி தலைமையில் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் லாரியில் ரூ. 1.13 லட்சம் ரொக்கம் இருந்ததும், கும்பகோணத்திலுள்ள நெகிழி முகவரிடம் நெகிழி வாங்குவதற்காகக் கொண்டு செல்வதும், ஆனால் அதற்குரிய ஆவணம் இல்லாததும் தெரிய வந்தது. இதையடுத்து, ரூ. 1.13 லட்சம் ரொக்கத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர். .