புதுகை மாவட்டத்தில் திறப்புக்கு தயாராகும் மூன்று மரகத பூஞ்சோலைகள்!
புதுகை மாவட்டத்தில் திறப்புக்கு மூன்று மரகத பூஞ்சோலைகள் ஜூன் இரண்டாம் வாரத்தில் திறப்பதற்குத் தயார் நிலையில் உள்ளன
புதுக்கோட்டை: வனப் பகுதியை விரிவுபடுத்தும் வகையில் வனத் துறையின் ‘பசுமைத் தமிழ்நாடு இயக்கம்' சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிகள் தொடங்கப்பட்ட 3 மரகதப் பூஞ்சோலைகளும் ஜூன் இரண்டாம் வாரத்தில் திறப்பதற்குத் தயார் நிலையில் உள்ளன. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் வரும் 2031 ஆம் ஆண்டுக்குள் 33 சதவிகிதப் பசுமைப் பரப்பை உறுதி செய்யும் முன்னோடித் திட்டங்களில் ஒன்றாக 'மரகதப் பூஞ்சோலைத் திட்டம்' கடந்த 2022-23-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, மாநிலம் முழுவதும் 100 இடங்களில் தலா ஒரு ஹெக்டேர் (இரண்டரை ஏக்கர்) இடத்தில் இப்பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை தஞ்சை சாலையில் ஆதனக்கோட்டைக்கு முன்பு குப்பையன்பட்டி, கீரனூர் அருகே வாளியம்பட்டி, திருமயம் அருகே ஊனையூர் ஆகிய 3 இடங்களில் இந்த மரகதப் பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இங்கே, பலா, சொர்க்கம், நாவல், வில்வம், பாதாம், மகாகனி, வேங்கை, வேம்பு, புளி, செம்மரம், தேக்கு, சவுக்கு, கொடுக்காப்புளி, பூவரசு, ஆவி, நெல்லி, தான்றி, நீர்மருது, இலுப்பை, ஈட்டி, கொய்யா, சந்தனம், சப்பாத்திக்கள்ளி, மா, ப உள்ளிட்ட 38 வகையான பயன்தரும் மரங்கள் சுமார்ஆயிரம் என்ற எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டுள்ளன.இவற்றுடன், செஞ்சந்தனம், அத்தி, புரசு, குங்குமப்பூ, வன்னி, புன்னை, கருங்காலி, மகிழம் உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட்ட 'ராசி வனமும்' அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் நாற்றங்காலில் தேர்ந்தெடுத்து வளர்த்தெடுக்கப்பட்ட இம்மரக்கன்றுகளை, பூங்காக்களில் நட்டு கடந்த ஓராண்டாக தண்ணீர்ஊற்றிக் காப்பாற்றுவதற்காக ஆழ்துளைக் கிணறும் அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்தந்தப் பகுதிகளின் ஊராட்சி அமைப்புகள் சார்பில் மக்கள் வந்து செல்லும்போது பயன்படுத்துவதற்காக கழிப்பறைகளும் கட்டித் தரப்பட்டிருக்கின்றன. மேலும், இயற்கையான மரங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இருக்கைகளும், மூங்கில் கொண்டு தயாரிக்கப்பட்ட குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் சதாசிவம் கூறியது: பசுமைப் பரப்பை அதிகரிக்கும் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பூஞ்சோலைகளை இரு ஆண்டுகள் வனத்துறை பராமரிக்கும்.
அதன்பிறகு, அந்தந்தப் பகுதி உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிடுவோம். முற்றிலும் இலவசமாக இந் பூஞ்சோலைகள் மக்கள்பார்ப்பதற்கு திறக்கப்படவுள்ளன. அறியாத மரங்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளவும் பயன்படும் என்றார் சதாசிவம். வரும் ஜூன் இரண்டாம் வாரத்தில் திறக்கப்பட்டு, இம்மூன்று மரகதப் பூங்காக்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, மாவட்டத்தின் பல பகுதிகளில் இதேபோன்ற பூஞ்சோலைகளை உருவாக்குவதற்கு வனத்துறை திட்டமிட்டுள்ளது.