தூய்மை பணிக்கு ரூ.8 லட்சத்தில் 5 பேட்டரி வாகனங்கள்
காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு தூய்மை பணிக்காக 5 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள குடியிருப்புகள், கடைகள், வாரச்சந்தை, பஸ் நிலையம் போன்ற இடங்களில் இருந்து தினமும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சேகரித்து வளமீட்பு பூங்காவுக்கு கொண்டு செல்கின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக கூடுதலாக பேட்டரி வாகனம் வாங்க திட்டமிடப்பட்டது.
இந்தநிலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 5 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சி பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன், பேரூராட்சி துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. பேரூர் செயலாளரும் பேரூராட்சி உறுப்பினருமான பாஸ் என்ற நரசிம்மன் வரவேற்றார். நிகழ்ச்சியில் புதிதாக வாங்கப்பட்ட 5 பேட்டரி வாகனங்களை தூய்மை பணி பயன்பாட்டிற்காக பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் பேரூராட்சி உறுப்பினர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.