அதிரடி சோதனை - ஒரே நாளில் 7 கிலோ கஞ்சா பறிமுதல், 6 பேர் கைது
Update: 2023-12-04 01:11 GMT
கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் அழகேசன், உதவி ஆய்வாளர் சுபாஷ் ஆகியோர், கண்ணுசாமி நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் 2 மூட்டைகளுடன் நின்றிருந்த இருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் கண்ணுசாமி நகர் சங்கர் (38), முகமது ரபீக் (38) என்பதும், மூட்டையை சோதனை செய்ததில் 5கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கர், முகமது ரபீக் ஆகியோரை கைது செய்து, 5 கிலோ கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இதேபோல் தாலுகா காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் குழந்தைவேல் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வலையப்பேட்டை நூலகம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் வலையப்பேட்டை மாங்குடி பகுதியை சேர்ந்த சகாய செந்தில் (46), மாரியம்மாள் (45) என்பதும், அதேபகுதியில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மோகன் (50) என்பவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். இதேபோல் குடந்தை மேற்கு போலீசார் நடத்திய அதிரடி சோத னையில் மாதுளம்பேட்டையில் 350கிராம் கஞ்சாவை விற்பனைக் காக வைத்திருந்த மாத்தி கேட் பகுதியை சேர்ந்த கார்த்திக் (24) என்பவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். டி எஸ்பி., கீர்த்திவாசன் தலைமையிலான போலீசார் ஒருநாள் அதிரடி சோதனையில் சுமார் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.