புத்தகம் ஒன்றே அறிவுத்திறனை வளர்க்கும் - கலெக்டர் பேச்சு

Update: 2023-11-22 06:11 GMT
தேசிய நூலக வார விழாவில் மாவட்ட ஆட்சியர் பழனி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் 56-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா நூலக அலுவலகத்தில் நடைபெற்றது, விழாவிற்கு மாவட்ட மைய நூலகர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். நூலகர் ஆரோக்கியம் வரவேற்றார். ஆசிரியர் ராம மூர்த்தி, வாசகர் வட்ட பொருளாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி, நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு, விழுப்புரம் ரோட்டரி சங்க தலைவர் கன்யா ரமேஷ்குமார், எழுத்தாளர் செங்குட்டுவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்துகொண்டு பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை எழுதுதல், ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:- தேசிய நூலக வார விழாவின் முக்கிய நோக்கம், பள்ளி - கல்லூரி மாணவ- மாணவிகளிடையே புத்தக வாசிப்புத்திறனை மேம்படுத்து வது மிக முக்கிய கருப்பொருளாக கருதப்படுகிறது. மாணவ- மாணவிகள் ஒவ்வொருவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும். ஏனென்றால் புத்தகம் ஒன்றே தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் என்பதால் ஒவ்வொருவரும் கட்டாயம் நூலகத்திற்கு சென்று வாசிப்புத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட மைய நூலகத்திற்கு சாலை வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நூலகத்தில் மாணவ- மாணவிகளுக்கென டிஜிட்டல் முறையிலான கணினி நூலகம் அமைத்திடும் வகையில் தன்னார்வலர்கள் மூலம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இவ்வாறு அவர் பேசினார். மேலும் மாவட்ட கலெக்டர் பழனி, தமக்கு வழங்கப்பட்ட 55 புத்தகங்களை மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் நூலகத்திற்கு வழங்கினார், விழா முடிவில் நூலகர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News