பிறந்து சிலமணி நேரமேயான குழந்தை புதரில் வீச்சு - போலீசார் விசாரணை
Update: 2023-11-19 03:39 GMT
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே முஞ்சிறையில் இருந்து மங்காடு பாலம் செல்லும் சாலை செல்கிறது. இந்த நிலையில் கிராம அலுவலகம் தாண்டி குளத்தின் அருகில் நேற்று நண்பகல் நேரம் பிறந்து சில மணி நேரம் ஆன ஒரு ஆண் குழந்தையை துணியில் சுற்றி புதரில் போட்டு சென்றுள்ளனர். அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரத்தில் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டு, வாகனங்களை நிறுத்தி குழந்தையை என்ன செய்வது என யோசித்து திணறிக் கொண்டிருந்தனர். இதையடுத்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் தற்செயலாக அந்த வழியாக முஞ்சிறை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக வாகனம் வந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி, நிலைமையை எடுத்து கூறி, குழந்தையை எடுத்துச் செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தயக்கம் காட்டியுள்ளனர். உடனே சம்பவ இடம் சென்ற புதுக்கடை போலீஸ் நிலைய எஸ் எஸ் ஐ செல்லத்துரை, ஏட்டு கிங்ஸ்லி ஆகியோர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளரிடம் நாங்கள் உங்களுடன் வருகிறோம் என கூறி அதே வாகனத்தில் குழந்தையை பத்திரமாகக் கொண்டு சென்று குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. புதுக்கடை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.