அனுமதி இன்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
துறையூர் அருகே அனுமதி இன்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை ஏராளமானோர் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின்படி சிறப்பு தனி படை போலீசார் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர் .
அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உப்பிலியபுரம் பச்சைமலை தண்ணீர் பள்ளம் என்ற பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவரும், அதைத்தொடர்ந்து அதே பகுதியில் துப்பாக்கி வைத்திருந்தாக மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் துறையூர் அடுத்த செல்லிப்பாளையம் பகுதியில் , திருச்சி மாவட்ட எஸ்பி-யின் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தபோது செல்லிபாளையம் காட்டு கோட்டம் பகுதியில் கண்ணன் என்பவரது மகன் செல்வராஜ்(45) அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்து அவரிடமிருந்த 200மி கருமருந்து நிரப்பப்பட்ட குப்பி மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவுப்படி செயல்பட்டு வரும் தனிப்படை போலீசார் தொடர்ந்து துப்பாக்கிகளை துறையூர் பகுதிகளில் பறிமுதல் செய்தும், துப்பாக்கி வைத்திருப்பவர்களை கைது செய்தும் நடவடிக்கை எடுத்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் துறையூர் போலீசார் இது பற்றி கண்டு கொள்வதில்லை எனவும் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சு வருவதாகவும் அதையும் தனிப்படை போலீசாரே பிடித்து கைது நடவடிக்கை எடுத்ததாகவும் , திருச்சி மாவட்ட எஸ்பியாக வருண்குமார் பொறுப்பேற்ற பின் பொதுமக்கள் தன்னிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என வாட்ஸ் அப் நம்பரை அறிவித்திருந்தார். அதன்படி துறையூர் மற்றும் உப்பிலியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் குறித்து உள்ளூர் போலீசில் கூறியும் , காலதாமதமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து பொதுமக்கள் மாவட்ட எஸ்.பி.யின் வாட்ஸ் அப் எண்ணில் குற்றச்சம்பவங்கள் குறித்து தகவல்களைக் கூறி வருகின்றனர். மாவட்ட எஸ்பியும் தொடர்ந்து கண்காணித்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிரடி காட்டும் மாவட்ட எஸ்பி வருண்குமாரை பாராட்டும் சமூக ஆர்வலர்கள் இதேபோல் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளும் ஏராளமாக துறையூர் பகுதியில் முழுவதும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது எனவும் இதே போல் கஞ்சா புகையிலை பொருட்களும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே அதிக அளவில் புழங்கி வருவதாகவும் இது பற்றியும் மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.