தையல் தொழிலாளர் தொழில் கூட்டுறவு சங்கம் சார்பாக போராட்டம்
தையல் தொழிலாளர் தொழில் கூட்டுறவு சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெண்கள் தையல் தொழிலாளர் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இங்கு 1680க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சட்டைக்கு 22 ரூபாயும் கால் சட்டைக்கு 42 ரூபாயும் கூலியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இச்சங்க உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சியாமளாதேவி இனிமேல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளிதோறும் சென்று அளவு எடுத்து தைக்க வேண்டும். காலருக்கு கேன்வாஸ் வைத்து தைக்க வேண்டும் தரமான பட்டன், காஜா வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்தனர்.
இதனால் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கேன்வாஸ், பட்டன், காஜாவிற்கே சுமார் 20 ரூபாய் ஆகும். தையல் சங்கத்தில் ஊனமுற்றோர், விதவைகள் பெரும்பாலும் உள்ளனர். இதனால் பள்ளிகளுக்கு சென்று அளவு எடுப்பது இயலாது என உறுப்பினர்கள் எடுத்து கூறியுள்ளனர். அதற்கு அலுவலர் சியாமளாதேவி இச்சங்கத்தை மூடிவிடுவோம். நீங்கள் எல்லாம் வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் உறுப்பினர்கள் அரசின் உத்தரவுகளை எதிர்த்து முன்னாள் சங்க தலைவர் முருகேஸ்வரி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபடவிடாமல் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனை தொடர்ந்து மாவட்ட சமூகநல அலுவலர் சியாமளாதேவி அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு சட்டை தைக்க 300 ரூபாய் ஆகும் நிலையில் அதே தரத்தில் 32 ரூபாய்க்கு தைக்கவும், பள்ளிகளுக்கு சென்று அளவு எடுப்பது என நடைமுறைக்கு சாத்தியமில்லாததை எங்கள் மீது திணிக்க கூடாது என்றும், இதை தொடர்ந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். அதற்கு சியாமளாதேவி உங்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.