விருதுநகரில் விழிப்புணர்வு பேரணி
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் 18 வயது வரை பள்ளியில் கல்வி பயில்வதனை உறுதிசெய்தல்,
குழந்தைகளுக்கான வாழும் உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, பங்கேற்பிற்கான உரிமை ஆகியவற்றை உறுதி செய்தல், அனைத்து தளங்களிலும் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அளவிலான வன்முறையோ, குழந்தைத் தொழிலாளராகவோ, குழந்தைத் திருமணமோ, பெண் சிசு மற்றும் கருக்கொலையோ, பாலின பாகுபாடோ, ஜாதி வேற்றுமையா, குழந்தைத் கடத்தலோ நடைபெறாமல் தடுத்தல்,
அவ்வாறு எங்கேனும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எதிரான தீங்கிழைத்தலோ அல்லது வன்முறையோ நடைபெற்றால் அல்லது நடைபெறுவது போல் தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளித்தல், நமது மாவட்டத்தை ஒரு பாதுகாப்பான குழந்தை நேய மாவட்டமாக மாற்ற மனமார உறுதி அளித்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை சென்று நிறைவடைந்தது.
இப்பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.இல.மீனாட்சி, காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.பவித்ரா, குழந்தைகள் நலக்குழு தலைவர் திருமதி.வி.கெங்கா, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் திரு.சதீஸ்குமார், துணை தொழிலாளர் ஆய்வாளர் திரு.சதாசிவம், மனித வர்த்தகம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் திருமதி.பானுமதி, வேல்டுவிசன் இந்தியா தொண்டு நிறுவன திட்ட அலுவலரகள்;
மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்புடைய அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.