ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்று வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
வட சென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்று வாக்கு சேகரித்தார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் சென்னை, அயனாவரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அயனாவரம் சீனிவாசலு தெரு பகுதியில், புல்லட்டில் அமர்ந்த படி இரு சக்கர வாகனங்கள் அணிவகுக்க பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அதே பகுதியில் உள்ள பங்காரு தெரு, ரமணன் தெரு, ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று பாஜக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை இறைச்சி கடைகள், மளிகை கடை, வீடுகள் என விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பால் கனகராஜ் கூறியதாவது, வடசென்னை வளர்ச்சி இல்லாமல் இருப்பதால் மக்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். அதனால் நாளுக்கு நாள் பாஜகவிற்கான ஆதரவு அதிகரித்துள்ளது. முதலமைச்சரின் தொகுதி என்பதால்தான் எனக்கு ஆதரவு இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. கொளத்தூர் தொகுதியாக இருந்தாலும் பொதுமக்கள் பாஜகவிற்குதான் வாக்களிப்பார்கள்.
முதலமைச்சரின் தொகுதியாகவே இருந்தாலும் பிரதமரின் மீதுள்ள நம்பிக்கையால் இத்தொகுதியில் எனக்கு அதிக வாக்குகள் கிடைக்கும். கொளத்தூர் தொகுதியில் பிரதமருக்கான ஆதரவு அதிமுகவில் இருக்கு. வடசென்னையில் ஏராளமான பொதுமக்களுக்கு இருப்பிடத்திற்கான பட்டாவே இல்லாமல் உள்ளனர். அதனை நான் சுட்டிக்காட்டியவுடன் பட்டா வழங்கப்படும் என வாக்குறுதியாக தெரிவித்துள்ளனர். இதனை இதற்கு முன்னதாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டி இருந்தால் அது நிவர்த்தி செய்யப்பட்டிருக்குமே. அதனை ஏன் அவர் செய்யவில்லை. தமிழை தாய்மொழியாக பெறவில்லையே என கூறியதில் இருந்து தமிழ்நாடு முழுக்க பிரதமர் மோடி அலைதான் அதிகமாக வீசுகிறது எனத் தெரிவித்தார்.