தேர்தல் அலுவலர்கள் மீது பாஜக வேட்பாளர் புகார்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் தன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜுவை நேரில் சந்தித்து ஆதாரங்களுடன் அலுவலர்கள் மீது புகார் மனு அளித்தார்.

Update: 2024-04-07 04:18 GMT

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் போட்டியிடுகிறார்.  கடந்த ஒரு வார காலமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர பரப்பரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் அந்தியூர் அருகே தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டபோது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் வேட்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் வேட்பாளர் ஏ பி முருகானந்தம் மீது குன்னத்தூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பணியில் இருந்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தும் கூட தன்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும் இது குறித்து கேட்டதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு தனது நேரத்தை திட்டமிட்டு முடக்குவதற்காக இச்சம்பவம் நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக மாவட்ட ஆட்சியரும் ,  தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜுவை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து சம்பவம் நடந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளுடன் புகார் மனுவை அளித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ,எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் என்ற பெயரில் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் , அவ்வழியே வருபவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும் ,  இது குறித்தெல்லாம் கேட்டதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் , வழக்கு பதிவு செய்வதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை எனவும் , அதற்கான ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜூவிடம் விளக்கமாக எடுக்கக் கூறி புகார் மனு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News