மது குடிக்க பணம் தராததால் பஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
பேராவூரணி அருகே மது குடிக்க பணம் தர மனைவி மறுத்ததால், விரக்தியில் அரசு பஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால், அரசுப் பேருந்து ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் வாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் ( வயது 53 ) இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் ஒரு மகளும் மகனும் உள்ளனர்.
இவர் பட்டுக்கோட்டை டெப்போவில் அரசுப் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பணிக்குச் செல்லாத இவர், மது குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மனைவி பணம் தர மறுக்கவே மனமுடைந்த தமிழரசன், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டு அருகில் உள்ள தங்களுக்கு சொந்தமான ஒரு கீற்றுக் கொட்டகையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் சேரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தமிழரசன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தமிழரசன் தற்கொலை செய்து கொண்டதற்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்தும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.