செல்போன்கள் கொள்ளை - சிசிடிவியால் சிக்கிய பலே கொள்ளையன்
அன்னூரில் உள்ள செல்போன் கடையில் விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்ற கொள்ளையனை போலீசார் சிசிடிவி காட்சியின் உதவியோடு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் பேருந்து நிலையம் அருகே மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அன்வர் அலி(28) என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையின் சுவற்றில் துளையிட்டு 7 விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் அன்வர் அலி அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக்கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் அன்னூர் - கோவை சாலையில் மைல்கல் அருகே ரோந்துப்பணி மேற்கொண்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் அவர் தேனி மாவட்டம் குச்சனூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் மணிகண்டன்(35) என்பதும்,தற்போது கோவை இடிகரை பகுதியில் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர் மீது தேனி, திருப்பூர்,கோவை,ஈரோடு,தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போன்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.10000த்தை பறிமுதல் செய்தனர்.பின் அவரை அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.