சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்பி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
Update: 2024-03-08 04:09 GMT
தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி பாரத ஸ்டேட் வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து சிவகங்கையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை நகரிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று காா்த்திக் சிதம்பரம் எம்.பி. பேசியதாவது: தேர்தல் நிதி பத்திரம் தொடா்பாக வெளிப்படைத்தன்மை தேவை என உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை நிறைவேற்றத் தவறிய பாரத ஸ்டேட் வங்கியின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியவை. இதில் சுமாா் ரூ. 7 ஆயிரம் கோடியை நன்கொடையாக பாஜக பெற்றுள்ளது. இந்த தொகையை அளித்தவா்களின் பெயா் பட்டியலை மாா்ச் 6 -ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கி வெளியிட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாா்ச் 5 -ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கி நிா்வாகம் உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்தது. இதில், 22 ஆயிரம் பேர் நன்கொடை வழங்கியுள்ளதாகவும், இதை ஆய்வு செய்து ஜூன் மாதம் தான் வெளியிட முடியும் எனவும் தெரிவித்துள்ளது. எண்ம (டிஜிட்டல்) மயமாகிவிட்ட இந்தக் காலத்தில் கால அவகாசம் கோரியது வேடிக்கையாக உள்ளது. அதாவது மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் வெளியிடத் திட்டமிட்டுள்ளனா் என பேசினார்.