வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த கலந்தாய்வு
கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவிலில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அறிக்கையினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் முன்னிலையில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று (21.05.2024) கலந்தாலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க 04.06.2024 அன்று கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் கோணம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அதிகாலை 06.00 மணி வருகை புரிய வேண்டும். காலை 08.00 மணிக்குள் இறுதி அஞ்சல் வாக்குகள் பெறப்படும் (இதற்கு பிறகு பெறப்படும் தரப்படும் அஞ்சல் வாக்குகள் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது).
அதனைத்தொடர்ந்து அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பமாகும். 08.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஆரம்பமாகும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளரின் பிரதிநிதியாக வாக்கு எண்ணுகை இட முகவர் இருப்பார். வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேஜைகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் முகவரை நியமிக்க வேட்பாளர்களுக்கு சட்டம் அனுமதியளிக்கிறது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை தங்களுக்கான வாக்கு எண்ணும் இட முகவர்களாக நியமிக்கலாம். பாதுகாப்பு பணியாளர்கள் வாக்கு எண்ணும் அறைக்குள் நுழைய அனுமதியில்லை. முகவர்கள் அலைபேசி, ஐ-பேட், மடிக்கணினி அல்லது ஒலி அல்லது ஒளியைப் பதிவு செய்யத்தக்க யாதொரு மின்னணு கருவியையும் எண்ணுகை கூடத்திற்குள் எடுத்துவர அனுமதிக்கப்படமாட்டார்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்கள். நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், துணை காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா, உதவி தேர்தல் அலுவலர்கள் எஸ்.காளீஸ்வரி, செ.தமிழரசி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.