பள்ளி கட்டிடம் சேதம் - குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்
மெட்டுக்குண்டு கிராமத்தில் பள்ளி கட்டடங்கள் பழுதாக இருப்பதால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறிய பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மெட்டுக்குண்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது இது துவக்க பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் ஐந்து வகுப்பறைகள் உள்ள இந்த பள்ளி கட்டிடம் மிகுந்த சேதம் அடைந்து காணப்படுவதால் மழை நேரங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் ஒழுகுவதாக கூறப்படுகிறது இதன் காரணமாக மழை பெய்தாலே மாணவர்களுக்கு தலைமையாசிரியர் விடுமுறை விட்டு விடுவதாகவும் வீட்டில் இருக்கும் பெற்றோர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறுவதாகவும் கூறப்படுகிறது. பள்ளி வளாகம் முழுவதும் புதர் மண்டி காணப்படுவதால் மழை நீர் தேங்கி சுகாதாரம் இன்றி காட்சியளிக்கிறது. இதன் காரணமாக கொசு மற்றும் விஷ பூச்சிகளின் தொல்லை காணப்படுகிறது. நேற்று இதே பள்ளி வளாகத்தில் பாம்பு புகுந்ததாகவும் அதை அடித்து கொன்றதாகவும் கூறப்படுகிறது இதன் காரணமாக தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் பாதுகாப்பு இல்லை எனக் கூறியும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை பள்ளிக்கு தங்களுடைய குழந்தைகளை அனுப்ப மாட்டோம் எனக் கூறிய பெற்றோர்கள் பள்ளியில் இருந்து மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.