பக்தர்கள் சப்தமாதராக வழிபடுவது சதிக்கல்
காஞ்சிபுரம் அருகே கோனேரிகுப்பத்தில் பகுதிவாசிகள் வழிபாட்டில் இருப்பது சதிக்கல் மற்றும் அய்யனார் சிற்ப தொகுப்பு என அடையாளப்படுத்தியுள்ளனர்.;
சதிகல்
காஞ்சிபுரம் அருகே கோனேரிகுப்பத்தில் பகுதிவாசிகள் வழிபாட்டில் இருப்பது சப்தமாதர் சிலை அல்ல, அது சதிக்கல் மற்றும் அய்யனார் சிற்ப தொகுப்பு என அடையாளப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அன்பழகன் கூறியதாவது, காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிக்குப்பம் அடுத்த, அண்ணாமலை நகரில் கள ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, அப்பகுதியினர் சப்தமாதர் சிலை என, வழிபட்டு வந்த சிலையை ஆய்வு செய்தோம்.
ஆய்வில் கண்டறியப்பட்ட சிற்பங்கள் இரு பிரிவுகளாக உள்ளன. அவற்றில் ஒன்றில் போர் வீரர் ஒருவர், கையில் வாளுடனும், அவரது மனைவி கையில் மலருடனும் உள்ளார். தலைப்பாகை, ஆடை அணிகலன்கள் ஆகியனவும் சிற்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சதிக்கல் என அழைக்கப்படுகிறது. இதே போல, மற்றொரு கல்லில், தமிழர்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வரும் அய்யனார் சிற்பத் தொகுப்பாக உள்ளது.
இது, 16 அல்லது 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இச்சிற்பத்தில் அய்யனாருக்கு வலது பக்கம் பெண் ஒருவர் வணங்கும் நிலையிலும், இடது பக்கம் இடது கைக்கு கீழே சிறிய உருவமும் உள்ளது. அது என்ன உருவம் என தெரியவில்லை. இதையடுத்து இரு போர் வீரர்கள் போர் வாள், கேடயம் ஆகியவற்றோடு போருக்கு செல்லும் முன்பு அய்யனாரை வழிபட்டு செல்வது போன்று செதுக்கப்பட்டுள்ளது என்பதை, அடையாளப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.