கூட்டணி பலத்தை நம்பி திமுகவும்,பாஜகவும் உள்ளன - ராஜேந்திரபாலாஜி
திமுகவும்,பாஜகவும் கூட்டணி பலத்தை நம்பி இருக்கின்றன, அதிமுக மக்களை நம்பி இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து சிவகாசி அதிமுக மேற்கு கழக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர்,எடப்பாடி பழனிச்சாமியின் கரத்தை வலுப்படுத்த வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.சில தொலைக்காட்சிகள் கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை செய்கிறார்கள்.தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக நிற்க வேண்டும் என ஒரு சட்டம் போட்டால் அதிமுக மட்டும் தான் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும்.பல கட்சிகள் காணாமல் போய்விடும்.
திமுகவிற்கு ஓட்டு வங்கி கிடையாது.திமுக கூட்டணி பலத்தை நம்பி நிற்கிறது.பாஜகவும் கூட்டணி பலத்தை நம்பி நிற்கிறது.அதிமுக ஒன்றுதான் மக்களை நம்பி நிற்கிறது.கூட்டணி வருமா வராதா என்பதை நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதை எடப்பாடி பழனிச்சாமி பார்த்துக் கொள்வார்.மீண்டும் மீண்டும் திமுகவினர் பொய் சொல்லுகின்றனர் என தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் சிவகாசி மேற்கு பகுதி செயலாளர் தொகுதி கருப்பசாமிபாண்டியன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.