மக்களை ஏமாற்றும் தி.மு.க: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
தி.மு.க., ஆட்சி மக்களை ஏமாற்றுகின்ற லஞ்சம் வாங்குகின்ற, மக்கள் பணத்தை சுரண்டுகின்ற ஒரு தோல்வியுற்ற ஆட்சியாக இருக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜசபா எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முதல் முறையாக இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். அப்போது அவருக்கு பா.ஜ.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய எல்.முருகன் ஊர்வலமாக திறந்தவேனில் சேரிங்கிராசில் இருந்து காபி ஹவுஸ் வரை சென்றார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது - பிரதமர் மோடி இந்தியவை மிகவும் வளர்ந்த நாடாக மாற்றியுள்ளார். "எண் மண், எண் மக்கள்" தமிழக யாத்திரையில் பிரதமர் கலந்து கொண்டு நிறைவு செய்து வைத்தார்.
"என் மண், என் மக்கள்," யாத்திரை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் பா.ஜ.க., முக்கிய கட்சியாகவும் வளர்ந்து கொண்டு உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., தோல்வியுற்ற ஆட்சியை கொடுத்துக் கொண்டு உள்ளது. தி.மு.க., வினர் குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல ஆட்சி செய்து வருகின்றனர். தி.மு.க., வின் முக்கிய நிர்வாகி போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்திற்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா 2ஜி ஊழல் வழக்கில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பொதுமக்களுக்கு சாலை அமைப்பதற்கு பதிலாக தனக்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு சாலை அமைத்துள்ளார். தி.மு.க., வைச் சார்ந்த 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடந்து வருகிறது. தமிழகத்தில் நடக்கும் தி.மு.க., ஆட்சி மக்களை ஏமாற்றுகின்ற லஞ்சம் வாங்குகின்ற, மக்கள் பணத்தை சுரண்டுகின்ற ஒரு தோல்வியுற்ற ஆட்சியாக இருக்கிறது.
தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு உள்ளது. இதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். ஊட்டி நகராட்சியில் தி.மு.க., கவுன்சிலர் லஞ்சம் வாங்குவதாக மற்றொரு கவுன்சிலரே குற்றம் சாட்டினார்.
ஆனால் அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகளுக்கு விருப்பமில்லாமல் ஊட்டி நகராட்சி சந்தை கடைகள் இடிக்கப்படுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களாக தி.மு.க., வினர் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் கமலஹாசன் கட்சி தனியாக போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடும் என்ற அச்சத்தில் தி.மு.க., கூட்டணிக்கு சென்றுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., வேட்பாளரிடம் மண்ணை கவ்வினார்.
கமல்ஹாசன் பா.ஜ.க., விற்கு ஒரு பொருட்டே இல்லை. நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கி இருப்பதை வரவேற்கிறேன். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் போதை பொருட்கள் விழிப்புடன் இருந்து குஜராத் அரசாங்கம் பறிமுதல் செய்கிறது. மகளிர் தினத்தன்று மகளிருக்கு பரிசு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் எரிவாயு விலையை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டிற்கு மட்டும் 3.5 கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கழிப்பிடங்கள் இலவசமாக கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.
11 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 400 ரூபாய் வீதம் எரிவாயு மானியமும் வழங்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றம் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தியாவை மிகச்சிறந்த சுற்றுலா நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதில் ஊட்டி நகரும் இணையும். ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு குடிதண்ணீர் வசதி இல்லை. வாகன நிறுத்துமிடம் இல்லை. இதையெல்லாம் சரி செய்யும் விதத்தில் பா.ஜ.க., வேட்பாளர் பணியாற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.