மருத்துவமனையில் உலா வரும் நாய்கள் - நோயாளிகள் அச்சம்.
திருவாலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருவாலங்காடு ஊராட்சியில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு, ஒரு நாளைக்கு 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிவதுடன், திடீரென மருத்துவமனைக்கு உள்ளேயும் செல்கின்றன. அவ்வாறு நுழையும் நாய்கள், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியரை கடிக்கும் அபாய நிலை உள்ளது.மேலும், மருத்துவமனைக்கு வரும் சிறுவர் - சிறுமியர் மற்றும் பெண்களை கடிக்க பாய்கின்றன. நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.