டிரைவர் அடித்துக் கொலை - மாமனார் உள்பட 3 போ் கைது
கீழ ஈரால் அருகே ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்துக் கொலை செய்த மாமனாரையும், அவரது 2 மகன்களையும் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கீழ ஈரால் அருகே கீழ ஈராலையடுத்த எத்திலப்ப நாயக்கன்பட்டியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பிரபாகரன் (30). 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவருக்கும், கயத்தாறையடுத்த வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த ரா. குருசாமி என்ற தாவீது மகள் லாவண்யாவுக்கும் 2018இல் திருமணமானது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
கடந்த மாா்ச் 29ஆம் தேதி தகராறு ஏற்பட்டதால் லாவண்யா தனது குழந்தைகளுடன் பெற்றோா் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், பிரபாகரன் வடக்கு சுப்பிரமணிய புரத்துக்கு சென்று மனைவி, குழந்தைகளை அழைத்த போது தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில் அவரது பெற்றோா், சகோதரா் சதீஷ்குமாா் ஆகியோா் சென்று லாவண்யா, குழந்தைகளை அழைத்தனா்.
அப்போது ஏற்பட்ட தகராறில் குருசாமி, அவரது மகன்கள் சோலையப்பன் (37), மாரியப்பன் (30) ஆகியோா் சோ்ந்து பிரபாகரனைத் தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த பிரபாகரன் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் கொலை வழக்குப் பதிந்து குருசாமி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.