பணியின் போது மதுபோதை: நடுவழியில் உறங்கிய நடத்துனர்

பணியின் போது மது போதையில் நடுவழியில் பேருந்தை நிறுத்திவிட்டு உறங்கிய அரசு பேருந்து நடத்துனரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-29 10:40 GMT

நடுவழியில் நிற்கும் பேருந்து

சோளிங்கர் பணிமனைக்கு உட்பட்ட தடம் எண்-51 அரசு பஸ் காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பாணாவரம் வழியாக சோளிங்கர் வரை தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் காலை 8.30 மணி, மாலை 5.30 மணி ஆகிய நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மாலை காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து 3 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த பஸ் தாமதமாக 3.40 மணிக்கு புறப்பட்டு பஜார் வீதி வழியாக சோளிங்கர் நோக்கி சென்றுள்ளது.

பஸ்சில் பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் பயணம் செய்துள்ளனர். பஸ்சில் பணியில் இருந்த கண்டக்டர் மது போதையில் தன்னிலை மறந்து இருந்ததாக கூறப்படுகிறது. காவேரிப்பாக்கத்தை அடுத்த மாங்காளி அம்மன் கோவில் அருகே பஸ் சென்றபோது, போதை தலைக்கேறிய நிலையில் பஸ்சை நிறுத்துமாறு கூறியிருக்கிறார்.

இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். உடனே கண்டக்டர் பஸ்சில் இருந்து இறங்கி கோவில் வளாகத்தில் படுத்து உறங்கி உள்ளார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கோபமடைந்த சிலர் அவரை திட்டிக்கொண்டே பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் பயணிகள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் தங்களது பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.

சிரமத்திற்கு ஆளான மக்கள் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News