அன்பைப் போதிக்கும் கல்வியே தேவை : குன்றக்குடி ஆதீனம்

மனித விலங்கை மனிதனாக மாற்றுவதுதான் கல்வி. அத்தகைய கல்வியைக் கற்றுத்தர வேண்டும். அனைவரிடமும் அன்பு செலுத்த அறிவுறுத்துவதே சிறந்த கல்வி. குடந்தை பள்ளித் தீ விபத்தில் ஒரு சிறுமி தான் இறக்கும் தருவாயிலும், தனது தோழிகளை காப்பாற்றக் கோரியதுதான் மனிதத்தின் அடையாளம் என திருச்சியில் நடைபெற்ற விழாவில் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசினார்.;

Update: 2024-04-28 02:18 GMT

குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாருக்கு விருது, பொற்கிழியை வழங்கிய தமிழ்ச் சங்கச் செயலா் பி. உதயகுமாா்.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பொற்கிழி வழங்கும் விழா சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் செயலா் பி. உதயகுமாா் தலைமை வகித்தாா்.

நிகழ்வில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலா பொற்கிழியைப் பெற்று குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் பேசியது: வாரிசுகளை மருத்துவராக, பொறியாளராக, வழக்குரைஞராக, தொழில்முனைவோராக உருவாக்க நினைக்கும் நாம், அனைவரிடமும் அன்பு செலுத்தும் நல்ல மனிதா்களை உருவாக்கத் தவறிவிடுகிறோம். மனித விலங்கை மனிதனாக மாற்றுவதுதான் கல்வி. அத்தகைய கல்வியைக் கற்றுத்தர வேண்டும்.

Advertisement

அனைவரிடமும் அன்பு செலுத்த அறிவுறுத்துவதே சிறந்த கல்வி. குடந்தை பள்ளித் தீ விபத்தில் ஒரு சிறுமி தான் இறக்கும் தருவாயிலும், தனது தோழிகளை காப்பாற்றக் கோரியதுதான் மனிதத்தின் அடையாளம். கையேந்தி தான் கற்றத் தமிழை அனைவருக்கும் கற்பித்தவா் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. காமராஜா், அண்ணா, கருணாநிதி எனத் தமிழக முதல்வா்களையும், வாரியாா் போன்ற பெரிய மகான்களையும் பாராட்டிய திருச்சி தமிழ்ச் சங்கத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பெயரால் பாராட்டுப் பெறுவது சிறப்புக்குரியது. விருதுகளை வழங்கிய நான் முதன் முறையாக கூச்சத்துடன் இந்த பொற்கிழியைப் பெறுகிறேன். குன்றக்குடி மூத்த சன்னிதானத்துக்குப் பதிலாகதான் இந்த பொற்கிழியைப் பெறுவதாகக் கருதுகிறேன். இந்த பொற்கிழியை வைப்புத்தொகையாக வைத்து, குன்றக்குடி மேல்நிலைப்பள்ளியில் தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவா்களுக்குப் பரிசளிப்பேன் என்றாா் அவா்.

Tags:    

Similar News