எலக்ட்ரிகல்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் பகுதியில் எலக்ட்ரிகல்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-17 04:26 GMT

தற்கொலை 

விராலிமலை ஒன்றியம் மாத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் குமரவேல்(54). மாத்துார் கடை வீதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10ம் தேதி குமரவேலின் மனைவி அவரது மருமகளின் பெற்றோர் வீடான சிவகங்கை மாவட்டம் கீழசீவல்பட்டிக்கு சென்றிருந்தார்.

குமரவேல் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. ஊர் திரும்பிய குமரவேலின் மனைவி நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்பட வில்லை. வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்டைந்த அவர் அருகில் வசித்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, படுக்கை அறையில் குமரவேல் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து குமரவேல் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News