முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால் விவசாயி தற்கொலை
பேராவூரணி அருகே மதுரையை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காத விரக்தியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெலிக்ஸ் ராஜா (41) இவர் மதுரையை தலைமை இடமாகக் கொண்ட நியோ மேக்ஸ் மற்றும் சென்ரியோ நிறுவனங்களின் துணை நிறுவனமான, லிவ்ஸ் மார்ட் ப்ராப்பர்ட்டீஸ் லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சார்லஸ் (தேவகோட்டை), நாகரத்தினம் (காரைக்குடி), பாலசுப்பிரமணியன் (கோவை) ஆகியோர் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் முதலீடு செய்தார்.
இந்த நிறுவனத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 24 சதவீத வட்டி வழங்கப்படும், 30 மாதங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நிறுவனம் வெளியிட்டு இருந்தது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பினை நம்பி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நடுத்தர மக்கள் ஆங்காங்கே துவங்கப்பட்ட கிளைகளில் பெருந்தொகையினை முதலீடு செய்தனர். ஆனால் நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு கூறியபடி தொகையினை வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நியூ மேக்ஸ் நிறுவனத்தின் சுமார் ரூ.22 கோடி மதிப்பிலான சொத்துக்கள், ஆவணங்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெலிக்ஸ் ராஜாவுக்கு கூறியபடி வட்டி கொடுக்காததால் தனது உறவினர் ஒருவர் மூலம் நிறுவனத்தை அணுகி முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டதற்கு , நிறுவனத்தின் அடியாட்கள் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. தனது சேமிப்பும், நிலத்தை விற்று முதலீடு செய்த பணமும் போய்விட்டதே என்ற விரக்தியில் கடந்த 26 ஆம்தேதி விஷம் குடித்த பெலிக்ஸ் ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 30 ஆம் தேதி பரிதாபமாக இறந்தார்.
அவரது உடல் உடற்கூறாய்வுக்கு பின்னர் ஜூலை.1 திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து பெலிக்ஸ் ராஜாவின் மனைவி மார்க்ரேட் ரோஸ்லின் மேரி(34) தனது கணவர் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் உத்தரவின் பேரில் திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் சேரன் மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தேவகோட்டையை சேர்ந்த சார்லஸ், காரைக்குடி நாகரத்தினம், கோவை பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர் . மேலும் புனல்வாசல் கிராமத்தில் பலர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நியோ மேக்ஸ் சார்பு நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்துள்ளதாக தெரியவந்துள்ளது.