வேகத்தடை இல்லாததால் அச்சம்: படூர் கூட்டுச்சாலையில் 'திக்... திக்'

படூர் கூட்டுச்சாலை அருகே நான்குவழிச் சாலைகளிலும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-06-30 14:45 GMT

வேகத்தடை இல்லாத சாலை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் இருந்து, மதுார் வழியாக படுர் கூட்டுச்சாலை செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில் படூர் கூட்டுச்சாலை அருகே பிரிந்து, ஆனம்பாக்கம் வழியாகச் செல்லும் சாலையும், படூர் வழியாக மலையாங்குளம் செல்லும் மற்றொரு சாலையும் உள்ளது. 

 அதேபோல், குண்ணவாக்கம் கூட்டுச்சாலைக்கான இணைப்பு சாலையும் உள்ளது. இங்குள்ள நான்கு வழிச்சாலைகளை சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்தோர், இருசக்கர வாகனங்கள் வாயிலாக, இச்சாலைகள் வழியாக தினமும் உத்திரமேரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

அதிக போக்குவரத்து உள்ள இச்சாலையில், எப்போதும் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால், படூர் கூட்டுச்சாலை அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே, இந்த கூட்டுச்சாலை அருகே, குண்ணவாக்கம் செல்லும் பகுதியிலும், மதுார் செல்லும் சாலை மற்றும் ஆனம்பாக்கம், படூர் கிராமங்களை நோக்கி செல்லும் சாலை பகுதிகளிலும், வேகத்தடை அமைக்க வேண்டும் என, பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

 இது தொடர்பாக, அப்பகுதி வாசிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, படூர் கூட்டுச்சாலை அருகே நான்குவழிச் சாலைகளிலும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News