தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2024-03-01 16:08 GMT
தீ விபத்து

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்களில் வியாழக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது, இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை ஜெபமாலைபுரம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் இருப்பு வைத்து, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து வருகின்றனர்.

சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குப்பை கிடங்களில் தற்போது 10 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை திடீரென குப்பை கிடங்களிலிருந்து தீ விபத்து ஏற்பட்டது.

காற்று பலமாக வீசியதால், குப்பைகள் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்பட்டது. குப்பையிலிருந்து வெளியேறிய புகை ஒருவித வாடையுடன் வீசியதால் ஜெபமாலைபுரம், சீனிவாசபுரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

தகவல் அறிந்ததும் தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மூன்று வாகனங்களில் சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதே போல் தஞ்சாவூர் மாநகராட்சி தண்ணீர் லாரிகள் மற்றும் மாநகராட்சி பணியாளர்களும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News