திருவிழா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு ஏராளமான உணவுக்கடை வைக்கப்பட்டதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-06 06:17 GMT
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு கடைகள் அமைத்து உணவுப் பொருட்கள், இனிப்பு வகைகள் விற்பனை கடைகள் ஏராளம் வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் உள்ள உணவுப் பொருள்கள் தரமற்றதாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதை அடுத்து கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் குளச்சல் நகராட்சி மற்றும் குருந்தன்கோடு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரவி உள்ளிட்ட அலுவலர்கள் திருவிழா கடைகளில் சென்று ஆய்வு செய்தனர். சுமார் 15க்கு மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. உணவு பண்டங்கள் மூடி வைக்கவும், தரமான கலவைகளை பயன்படுத்தி உணவு பொருட்கள் தயாரிக்கவும், செயற்கை நிறங்களை பயன்படுத்தாமல் இருக்கவும், தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது எனவும், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக்கூடாது எனவும், பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சுத்தம் சுகாதாரம் பேண அறிவுறுத்தப்பட்டது. மேலும் இது போன்ற சோதனைகள் தொடரும் எனவும், தவறு செய்பவர் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.