ஒகேனக்கல் வனப்பகுதியில் பழங்குடியினரை அப்புறப்படுத்திய வனத்துறையினர்

ஒகேனக்கல் வனப்பகுதியில் குடியிருக்கும் பழங்குடியினர் மற்றும் மீனவர்களை அப்புறப்படுத்திய வனத்துறையினரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-11 11:49 GMT

மக்களை அப்புறப்படுத்திய வனத்துறையினர்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருக்கும் பூர்வகுடிகளை வனத்துறையினர் வெளியேற்று வருகின்றனர். பென்னாகரம் அருகே உள்ள ஏமனூர், சிங்காபுரம், ஒகேனக்கல், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும் கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் உள்ளிட்டவர்களை வனத்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.

அதனடிப்படையில் ஒகேனக்கல் அருகே உள்ள எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு ஆகிய பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். கடந்த ஐந்து தலைமுறைகளாக குடியிருந்து வரும் அவர்களை வனப்பகுதி நிலத்தில் குடியிருப்பதாக கூறி வனத்துறையினர் அடிக்கடி அவர்களை தொந்தரவு செய்து வந்தனர்.

மேலும் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனப்பகுதியை வனமண்டலமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக அதிக கெடுபுடியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்ததாகவும் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 10 க்கும் மேற்பட்ட வனத்துறையினர், அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தகாத வார்த்தைகளில் பேசி அவர்களின் வீடுகளின் கூறைகளை பிரித்து, பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக தெரிவிக்கின்றனர்.

வீட்டில் இருந்த பெண்களை வெளியே இழுத்து தள்ளி உள்ளனர். அப்போது இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஐந்து தலைமுறைகளாக குடியிருந்து வரும் அவர்கள்,

திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவதால், போக இடம் தெரியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது தாங்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம் தங்களுக்கு படகு சவாரி செய்வது மீன்பிடிப்பது கால்நடைகள் மேய்ப்பது உள்ளிட்ட வேலைகள் மட்டுமே தெரியும் ஆனால் வனத்துறையினர் தங்களை இப்பகுதியில் இருந்து வெளியேற பலமுறை நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை முறையிட்டுள்ளோம். தங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத இருந்த நிலையில் தற்போது வனத்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தங்களது வீடுகள் மற்றும் உடமைகளை சேதப்படுத்தி உள்ளனர் எங்களுக்கு எங்கு செல்வது என தெரியாமல் இருந்து வருகிறோம் இந்த வன்முறையால் கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீடு கட்டி கொடுக்க முன்வர வேண்டும் தங்களது வாழ்வாதாரத்திற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வீடுகள் முழுமையாக அகற்றபட்டுள்ளது. தங்களுக்கு இருக்க இருப்பிடம் ஏற்படுத்தி தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News