அரசு பேருந்து - டிப்பர் லாரி மோதல் : போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் வத்தலக்குண்டு மலைச்சாலையில் டம்டம் பாறை அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் இருந்து வத்தலக்குண்டு பகுதிக்கு எம்.சேண்ட் ஏற்ற சென்ற டிப்பர் லாரியும், வத்தலக்குண்டு பகுதியில் இருந்து கிளாவரை கிராமத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்தும், வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் டம்டம் பாறை அருகே வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் சாமர்த்தியமாக பேருந்தை சாலையில் நிறுத்தவே பள்ளத்தில் கவிழும் சூழல் தவிர்க்கப்பட்டது, இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஸ்டவசமாக காயமின்றி தப்பினர், மேலும் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து பேருந்து பலத்த சேதமடைந்துள்ளது, இந்நிலையில் மலைச்சாலையில் டிப்பர் வாகனம் அதி வேகமாக இயக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விபத்தினால் பிரதான மலைச்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் இந்த சாலையினை கடக்க முடியாமல் அவதியடைந்தனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களையும் தனித்தனியே அப்புறப்படுத்தி ஒரு மணி நேரத்திற்கு பின்பாக போக்குவரத்தினை சீர் செய்தனர்.