அரசு பணியாளர்கள் மறியல் முயற்சி: 72 பேர் கைது

தஞ்சையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அரசுப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-19 01:05 GMT
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோருக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். ஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் பதவி உயர்வு, பணி நியமனங்களை நடைமுறைப்படுத்தவேண்டும். ஈட்டிய விடுப்பு, ஒப்புவிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் வ. ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம். சிவகுருநாதன், செயலர் ஏ. ஜெயசீலி, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். அறிவழகன், மாவட்டப் பொருளாளர் ஜெ. ராமலிங்கம், துணைத் தலைவர் கே. முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 32 பெண்கள் உள்பட 72 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tags:    

Similar News