பேராவூரணி அருகே எரித்து கொலை செய்யப்பட்டவர் ஆணா, பெண்ணா?
பேராவூரணி அருகே எரிந்த நிலையில் மனித உடல் பாகங்கள் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே குளக்கரையில் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த மனித எலும்புக்கூடுகளை வியாழக்கிழமை இரவு கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
பேராவூரணி அருகே உள்ள வீரியன்கோட்டை குளக்கரையில் எரிக்கப்பட்ட நிலையில் மனித எலும்புகள் கால், கை இரண்டாக உடைந்த நிலையில், மண்டை ஓட்டுடன் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து பேராவூரணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
எலும்புக்கூடுகளை வேறு இடத்திலிருந்து கொண்டுவந்து இங்கு எரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது எலும்புகளின் அருகில் ஈரோடு அருகே உள்ள துடுப்பதி தனியார் கல்வி நிறுவனத்தின் பெயர் உள்ள பேப்பர் ஒன்று கிடந்தது.இதையடுத்து எலும்புக்கூடுகளை கைப்பற்றிய காவல்துறையினர் அது ஆணா, பெண்ணா என கண்டறிய டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
காவல்துறையினர் விசாரணை கோணத்தை திசைதிருப்ப தனியார் கல்வி நிறுவனத்தின் பெயர் இருந்த பேப்பரை, எலும்புக்கூடுகளை கொண்டுவந்து எரித்த இடத்தில் மர்ம நபர்கள் போட்டுச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .