வீடற்ற ஏழைகளுக்கு கலைஞர் கனவு இல்ல வீடு - திமுக வேட்பாளர் முரசொலி

வீடற்ற ஏழை மக்களுக்கு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி வாக்குறுதி அளித்துள்ளார்.

Update: 2024-04-08 02:25 GMT

இந்தியா கூட்டணி சார்பில், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலி, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேதுபாவாசத்திரம் கடைவீதி, மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், பள்ளத்தூர், பூவாணம், கட்டையங்காடு, செருபாலக்காடு, அழகியநாயகிபுரம், நாடியம், வீரியங்கோட்டை, குருவிக்கரம்பை, வாத்தலைக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், கொளக்குடி, உடையநாடு, சம்பைபட்டினம், செந்தலைப்பட்டினம், சோழகனார்வயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக வாக்குச் சேகரித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, "மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் ரூ.70 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும். கடற்கரை முகத்துவாரங்கள் தூர் வாரப்படும். மீனவர்கள் கோரிக்கையை ஏற்று மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.  மீனவர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்தொகை, மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணம் என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றால், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். அவ்வாறு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர, உங்கள் வீட்டுப் பிள்ளையாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரான என்னை ஆதரித்து வெற்றி பெறச் செய்யுங்கள். உங்களுக்கு நன்றியுள்ளவனாக நடந்து கொள்வேன்" என்றார். 

பிரச்சாரப் பயணத்தில், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான கா.அண்ணாதுரை, தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி எம்எல்ஏவுமான நா.அசோக்குமார், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், திமுக ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், பேராவூரணி நகரச் செயலாளர் சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அ.அப்துல் மஜீத், தனபால், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிங்காரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.சி.பழனிவேலு மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க, மதிமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News