ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அச்சாரமிட்டவர் கலைஞர் - அமைச்சர் பேச்சு
குடிநீர் பிரச்சணையை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தீர்க்க அச்சாரம் இட்டவர் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் புகழாரம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா தொடங்கி வைத்து பேசிய தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் , தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி யில் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் நீர் தேவையை போக்க ரூ.19.46 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குடிநீர் மேம்பாட்டு பணிகள் மற்றும் நீர்குந்தியில் ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து 156 பயனாளிகளுக்கு ரூ.80.14 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.11.84 இலட்சம் மதிப்பீட்டில் பென்னாகரம் பேரூராட்சிக்கு மின் கலன் மூலம் இயங்கும் 6 வாகனங்களை பயன்பாட்டிற்கு அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும் போது தமிழ்நாடு முதலமைச்சர் கிராமங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, வடிகால் வசதிகள் உள்ளிட்டவைகளை விரைந்து நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் முனைப்புடன் பணியாற்றி வருகின்றார். தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சணையை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பிரச்சணை தீர்க்க அச்சாரம் இட்டவர் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் என்றும், அதை செயல்படுத்தியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும் கூறிய அவர், தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுடைய கோரிக்கைகளுக்கு செவிசாய்த்த சிறப்பான முறையில் பணியாற்றினால் மீண்டும் மக்கள் உங்களையே தேர்ந்தெடுப்பார்கள் என்பதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும் என அவர் கூறினார்.