கலவை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கலவை முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மேலப்பழந்தை கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை ஊர் பொதுமக்கள் இணைந்து கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் முதற்கால யாக சாலையில் பகவத் பிராத்தனை, ஸ்ரீ வரசித்தி கணபதி பூஜை, யஜமான சங்கல்பம், வாஸ்து ஹொமம், அக்னி பிரதிஷ்ட்டை, இரண்டாம் கால யாகத்தில் கோ பூஜை, அக்னி ஆராதனை, கும்ப பூஜை, பிரதான ஹோமம், மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம் உள்ளிட்டவை நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து வேத பட்டாட்சியர்கள் பூஜை செய்யப்பட்ட கலசத்தை தலையில் சுமந்து மேள தாளம் முழங்க கோவிலில் வலம் வந்து விமான கோபுரம் வந்தடைந்ததும் கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து புனித நீரை பக்தர்கள் மீது தெளித்தபோது கோவிந்தா.. கோவிந்தா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கருவறையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றதோடு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர தீபராதனை காட்டப்பட்டது. இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் சொரையூர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் தனபால், ஒன்றிய குழு உறுப்பினர் குணசுந்தரி கருணாநிதி உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.