குமரி : அதிவேக டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வரும் டாரஸ் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
நேற்று நடந்த விபத்து
குமரி மாவட்டத்தில் சாலைகளில் நெருக்கடியை குறைக்க சாலைகளில் கான்கிரீட் கட்டைகளால் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் 30 கிலோமீட்டர் வேகத்தில் தான் வாகனங்களை இயக்க வேண்டும். ஆனால் கனிவளங்களை ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகள் அதிவேகத்தில் செல்லும் நிலையில் இருந்து வருகிறது. இதனால் டாரஸ் லாரிகள் வரும்போது மற்ற வாகனங்கள் உயிர் பயத்துடன் பயந்து சாலையின் ஓரம் ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று கனிம வள லாரி ஒன்று பைக்கில் சென்றவர் மீது மோதியதில் அவர் கீழே விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் இந்த பிரச்சனையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள டாரஸ் லாரி டிரைவர் லாரியிலிருந்து கீழே இறங்கி வந்து பைக் ஓட்டிய நபரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குமரி மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.