மேட்டூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் கொள்ளை
சேலம் மாவட்டம் ,மேட்டூர் அருகே கோம்புரான்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மனைவி மல்லிகா (40). முருகேசன் இறந்த நிலையில் தனது மகன் இளவரசனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு தாயும் மகனும் கட்டிட வேலைக்கு சென்றதை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் மதில் சுவரை ஏறி குதித்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த சுமார் 7 சவரன் தங்க நகையையும், ரூ.10 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பிய மல்லிகாவும் அவரது மகனும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கொள்ளை சம்பவம் குறித்து கருமலை கூடல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.