கல்லால் தாக்கி மெக்கானிக் கொலை
குமரி மாவட்டம், சேனம்விளையை பகுதியில் மெக்கானிக்கை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே உள்ள சேனம்விளையை சேர்ந்தவர் உதயகுமார் (53). மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஜெகாராணி (50). வெள்ளிச்சந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இதனால் இவர்கள் பள்ளிச்சன்விளையில் உள்ள அரசு குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
கடந்த 8ம் தேதி இரவு 9.30 மணி அளவில் உதயகுமார் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, அதே பகுதி சபரிகிரிஷ் என்பவர் கல்லால் பின் தலையில் தாக்கியதாகவும், உதயகுமார் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி ஜெகாராணி மற்றும் அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து உதயகுமாரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சுயநினைவு திரும்பாத நிலையில் உதயகுமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உதயகுமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெகாராணி கொடுத்த புகாரின் பேரில் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்தனர். சபரிகிரீஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் கொலை சம்பவம் குறித்து இரணியல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.