மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
சேலம் மாவட்டம்,அம்மாபேட்டையில் உள்ள செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் அம்மாபேட்டையில் உள்ள செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்று வருகிறது. அதே போல இந்த ஆண்டும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதிகாலை கணபதி ஹோமம் தொடங்கி பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுந்தரேஸ்வரர்க்கும் மீனாட்சிக்கும் பால் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி பல்வேறு விதமான வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து உற்சவமூர்த்தி சுந்தரேஸ்வரர்க்கும் மீனாட்சிக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் மாங்கல்யத்தை காண்பித்து மேளதாளம் முழங்க சுந்தரேஸ்வரர் மீனாட்சிக்கு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. அப்போது கூடி இருந்த பக்தர்கள் நமச்சிவாய, நமச்சிவாய என கோஷங்கள் எழுப்பினர். மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. வைப்பவத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.