கனிமவள லாரி மோதி கார், பைக், டிராக்டர் சேதம்
வெள்ளமடம் அருகே குடிபோதையில் இயக்கப்பட்ட கனிமவள லாரி மோதியதில் கார், பைக், டிராக்டர்ஆகியவை சேதமடைந்தன.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே லாயம் சந்திப்பில் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு இன்று டாரஸ் லாரி ஒன்று வேகமாக வந்தது. அப்போது சாலை ஓரத்தில் நின்ற டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியதுடன், அருகாமையில் இருந்த வீட்டில் மதில் சுவரை இடித்து வீட்டினுள் நின்ற காரில் மோதி நின்றது. இந்த விபத்தில் கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள் முழுவதும் சேதம் அடைந்தது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் விபத்து ஏற்படுத்திய டாரஸ் ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டாரஸ் லாரி ஓட்டுனர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரி விபத்துகளால் பல்வேறு விபத்துகள், உயிரிழப்புகள் தொடர் கதையாக நடந்தும், அரசியல் பின் பலத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கனிமவள லாரிகள் விபத்து சர்வ சாதாரணமாகி விட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.