கரூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: 4பேர் மீது தாக்குதல்
கரூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சமரசம் செய்ய வந்தவரை தாக்கிய 4பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, முத்துராஜபுரம்,காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 36. இவரது நண்பர் தண்டபாணி. கரூர் உழவர் சந்தை எல்.என்.எஸ்.காவேரி அம்மன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் வயது 23. ஆகாசுக்கும் தண்டபாணிக்கும் ஏற்கனவே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு உள்ளது.
இந்த நிலையில், சுரேஷும் தண்டபாணியும் அருகில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு மது அருந்த ஜனவரி 17ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில் சென்றுள்ளனர். மது அருந்தி கொண்டிருக்கும் போது, அங்கு வந்த ஆகாஷ் அவரது நண்பர்கள் கௌதம், பிரவீன், வேதா என்கிற அன்புமணி ஆகிய நான்கு பேரும், மது போதையில் தகராறு செய்துள்ளனர்.
இதற்கு சுரேஷ் சமாதானம் பேசி, அவர்களை பிரம்ம தீர்த்தம் சாலையில் உள்ள அம்மா உணவகம் அருகே நிறுத்தி பேசிக் கொண்டிருந்தார். அப்போது,ஆகாஷ் உடன் வந்த மற்ற மூன்று பேரும் சேர்ந்து,சுரேஷை பேசவிடாமல் தடுத்து, தகாத வார்த்தை பேசி, கைகளாலும், தடியாலும் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
இந்த சம்பவத்தில் சுரேஷுக்கு உதடு, முன் நெற்றி, இடது கண் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு,திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ் அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆகாஷ், கௌதம், பிரவீன், வேதா என்கிற அன்புமணி ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.