சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அட்டகாசம் செய்யும் குரங்கு
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அட்டகாசம் செய்யும் குரங்கை பிடிப்பதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட ரயில்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கிறது. ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரயிலில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் குரங்கு ஒன்று ரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கடிக்கப் பாய்வதும், கையில் வைத்திருக்கும் பைகளை பிடுங்குவதும், பொதுமக்களின் ஆடைகளை பிடித்து இழுப்பதும்,
தின்பண்டங்களை பிடுங்கி சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ரயில் பயணிகளுக்கு தொந்தரவு செய்து வருகிறது. மேலும் ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் புகுந்து அங்கு இருக்கக்கூடிய உணவுப் பொருட்களை சூறையாடுவது என பல்வேறு சேட்டைகளை செய்து வருகிறது.
இதனால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களில் 10க்கும் மேற்பட்டோரை குரங்கு கடித்துள்ளது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் ரயில் பயணிகள் இது குறித்து ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து 1வது பிளாட்பார்ம் பகுதியில் குரங்கை பிடிப்பதற்காக கூண்டு ஒன்று அமைக்கப்பட்டது ஆனால் கூண்டில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை மட்டும் நைசாக வந்து சாப்பிட்டுவிட்டு தப்பித்து செல்கிறது.
கடந்த ஒரு வார காலமாக இதே போல குரங்கு காவல்துறையிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டு உள்ளது. புகாரின் அடிப்படையில் வனத்துறையினர் குழுவாக ரயில் நிலையத்திற்குள் குரங்கை பிடிக்கும் பணியில் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் குரங்கு ஒன்று பொதுமக்களையும் ரயில் பயணிகளையும் அச்சுறுத்திய சம்பவம் ரயில்வே நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது