குடிநீர் இன்றி தவித்து வரும் நாகனூர் கிராம மக்கள்
நாகனூர் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த நாகனூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த, இரண்டு ஆண்டு காலமாக கிராமத்தில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமலும், அத்தியாவசிய தேவையான குடிநீர் பற்றாக்குறையாலும் பெரும் அவதிக்குள்ளாவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தண்ணீர் தேவைக்காக, ஆங்காங்கே விவசாய நிலப் பகுதியில் தண்ணீர் தேடி கொண்டுவரும் அவல நிலை உள்ளதாக புலம்புகின்றனர். மேலும், கிராமத்தில் உள்ள இருபதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்காக, ஏரியில் வட்ட கிணறு அமைத்தும் இதுவரையில் பைப் லைன் அமைக்காததால் பயனற்று உள்ளது. ஆழ்துளை கிணறுகள், ஒன்று கூட சீர் செய்யப்படாமல் உள்ளதாகவும், அவற்றை சீர் செய்து கொடுத்தால் கூட, தினம்தோறும் தேவைப்படும் தண்ணீர் பற்றாக்குறை சரி செய்ய உதவும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் கிராமத்தில் உடனடியாக குடிநீர் பஞ்சத்தை போக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.